சட்டமன்றத் தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணியே வெற்றியை உறுதி செய்யும் – டிடிவி தினகரன்
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க பிப்ரவரி மாதம் வரை கால அவகாசம் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், கூட்டணிக்கு தலைமை வகிக்க விரும்பும் கட்சிகள் அமமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் அமமுக இணையும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும் என உறுதியாக கூறிய டிடிவி தினகரன், அமமுக ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.
அமமுக தான் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும் என்றும், டிசம்பர் 31க்குள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அந்த முடிவு தற்போது தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.