அமித்ஷாவின் அரசியல் வியூகம் திமுகவை பதற வைத்துள்ளது – வானதி சீனிவாசன்
வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வகுத்துள்ள அரசியல் திட்டம், திமுக தலைமையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவின் பிற மாநிலங்களை விட பாஜகவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரே கட்சி திமுக தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாஜகவால் வெற்றிபெற முடியாத மாநிலம் தமிழகம்தான் என்றும், அமித்ஷா எத்தனை பேரணிகளை நடத்தினாலும், எத்தனை படைகளை அழைத்து வந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடையாது என ஸ்டாலின் பேசியதாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியில், திமுக ஆட்சிக்கு உண்மையான அரசியல் சவாலாக பாஜக வளர்ந்து விட்டதால்தான், தொடர்ந்து பாஜக குறித்தும் அமித்ஷா குறித்தும் முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அமித்ஷாவின் வியூகம் திமுகவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மதிக்காத ஆட்சியாக திமுக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய வானதி சீனிவாசன், அத்தகைய ஆட்சிக்கு எதிராக வரும் பேரவைத் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.