சிறைக் கைதிகளின் SIR படிவங்களை ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம் : தேர்தல் ஆணையம்
சிறைக் கைதிகளின் SIR (Special Intensive Revision) படிவங்களை, அவர்களது ரத்த உறவினர்கள் பூர்த்தி செய்து வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், சிறைக் கைதிகளிடமும் SIR பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறைக் கைதிகளின் SIR படிவங்களை அவர்களது ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்து, தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த விளக்கத்தை எழுத்துப்பூர்வமான மனுவாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது