புதிய திருப்பங்கள்: மேம்படுத்தப்படும் 100 நாள் வேலைத் திட்டம் – 125 நாட்கள் வேலை, வார ஊதியம், மாநிலங்களுக்கும் நிதிப் பங்கு
100 நாள் வேலைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், அதை 125 நாள் வேலைத் திட்டமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதோடு, அந்தத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியச் செலவை மத்திய–மாநில அரசுகள் இணைந்து பகிர்ந்துகொள்ளும் வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
கிராமப்புற மக்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன், 2005ஆம் ஆண்டு ஊரக வேலை உறுதி சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், 2009ஆம் ஆண்டு, இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் (MGNREGA) என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டது.
பொதுவாக 100 நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்பட்டாலும், அண்மைக் காலங்களில் பல குடும்பங்களுக்கு முழுமையான 100 நாட்கள் வேலை கிடைப்பதில்லை என்பதைக் கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. 2024–25 நிதியாண்டில், ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 50 நாட்கள் அளவிலேயே வேலை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு சுமார் 41 லட்சம் குடும்பங்கள் மட்டுமே முழு 100 நாட்கள் வேலை செய்திருந்த நிலையில், இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 7 லட்சமாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திட்டத்தின் பயன்திறனை உயர்த்தும் வகையில், மத்திய அரசு சில முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி, திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என மாற்றுவதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய விதிமுறைகளின் படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 100 நாட்கள்தான் வேலை வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மசோதா, இந்த வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தவுள்ளது. இதனுடன், ஊதியச் செலவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான நடைமுறையிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுவரை, இந்தத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தை முழுமையாக மத்திய அரசே வழங்கி வந்தது. இனி, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊதியச் செலவை ஏற்கும் வகையில் திருத்தங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகளை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில், ஊதியச் செலவின் 90 சதவீதத்தை மத்திய அரசே ஏற்கும். மீதமுள்ள 10 சதவீதத்தை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கும், சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கும் 60:40 என்ற விகிதத்தில் நிதிப் பங்கீடு நடைமுறையில் இருக்கும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களில், முழு ஊதியச் செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டம் காரணமாக விவசாயப் பணிகளுக்கு தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில், ஆண்டுக்கு தற்காலிகமாக 60 நாட்களுக்கு இந்த 125 நாள் வேலைத் திட்டம் நிறுத்தி வைக்கப்படும். எந்த 60 நாட்கள் என்பதை மாநில அரசுகளே தீர்மானிக்கும். அந்தக் காலப்பகுதியில், புதிய வேலைத் திட்டங்கள் தொடங்கப்பட மாட்டாது; ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதுள்ள விதிப்படி, வேலை செய்த 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதனை மாற்றி, இனி வாரந்தோறும் ஊதியம் வழங்கும் முறையை அமல்படுத்தவும் புதிய மசோதா வழிவகை செய்யும் எனக் கூறப்படுகிறது.
தொழிலாளர்களின் நலனை முன்னிலைப்படுத்தியே இந்த மாற்றங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த சீர்திருத்தங்களின் மூலம், 100 நாள் வேலைத் திட்டத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.