சிட்னி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தந்தை–மகன் என்ற அதிர்ச்சி தகவல்

Date:

சிட்னி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகள் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தந்தை–மகன் என்ற அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நிகழ்த்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் அவரது மகனும் என்பதைக் காட்டும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பு இதோ:

உலக அளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கும் ஆஸ்திரேலியாவில், பொதுமக்கள் இடையே பயங்கரவாத துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் அரிதாகவே இடம்பெறுகின்றன. 1996 ஆம் ஆண்டு டாஸ்மேனியா மாநிலத்தின் போர்ட் ஆர்தர் சுற்றுலா மையத்தில் 35 பேர் உயிரிழந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு, இப்போது மீண்டும் ஒரு பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், யூத சமூகத்தினரின் வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றின் மீது எதிர்ப்புத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலஸ்தீன மக்களுக்கு ஆஸ்திரேலியா காட்டும் ஆதரவு, நாட்டில் யூத விரோத மனப்பான்மையை தூண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தாக்குதல் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்று சிட்னி போண்டி கடற்கரையில் 1000-க்கும் அதிகமான மக்கள் கூடி கொண்டாடிக் கொண்டிருந்தனர். கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பூங்காவில், நூற்றுக்கணக்கான யூதர்கள் எட்டு நாள் ஹனுக்கா பண்டிகையின் தொடக்கத்தை முன்னிட்டு “Chanukah by the Sea” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென அங்கு நுழைந்த இருவர், எந்த எச்சரிக்கையும் இன்றி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த தாக்குதலில், 10 வயது சிறுமி உட்பட 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் 42-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு வெடிக்கும் சத்தம் போல தொடர்ச்சியாக கேட்ட துப்பாக்கி சப்தத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் மணற்பரப்புகளிலும் அருகிலுள்ள தெருக்களிலும் சிதறி ஓடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தின.

கருப்பு நிற உடை அணிந்திருந்த அந்த இருவர், கடற்கரைக்கு செல்லும் நடைபாதை மேம்பாலத்தில் இருந்து போல்ட்-ஆக்சன் ரைஃபிள் மற்றும் ஷாட்கன் போன்ற துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டுக் கொண்டிருந்தது வீடியோ காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த பதற்றமான சூழ்நிலையிலும், பழக்கடை நடத்தி வந்த அகமது அல் அகமது என்பவர் தைரியமாக செயல்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரை எதிர்த்து பிடித்து, அவரிடமிருந்த ஆயுதத்தை பறித்த சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவரை “உண்மையான வீரர்” என நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் புகழ்ந்துள்ளார்.

அகமது அல் அகமதுவுக்காக தொடங்கப்பட்ட நிதி திரட்டல் முயற்சியில், 24 மணி நேரத்துக்குள் 1 லட்சத்து 33 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் நன்கொடை சேர்க்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இனவெறி மற்றும் யூத விரோத செயல்களை கட்டுப்படுத்த கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என முதல்வர் கிறிஸ் மின்ஸ் அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 50 வயதான சஜித் அக்ரம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடுமையாக காயமடைந்த அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் சஜித் அக்ரமின் நியூ சவுத் வேல்ஸ் ஓட்டுநர் உரிமப் படத்தில், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்திருப்பது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1998 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த அவர், பின்னர் பார்ட்னர் விசா மற்றும் ரெசிடென்ட் ரிட்டர்ன் விசாவாக மாற்றியுள்ளதாக உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.

HUNT மற்றும் GUN கிளப்பின் உறுப்பினராக இருந்த சஜித் அக்ரம், உரிமம் பெற்ற தனது ஆறு துப்பாக்கிகளையும் தாக்குதல் நடைபெற்ற நாளில் கடற்கரைக்கு கொண்டு சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், போண்டி கடற்கரை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் வெடிபொருட்கள் மற்றும் வெடிக்கச் செய்யும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த தாக்குதலில் மூன்றாவது நபர் தொடர்புடையவராக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

குற்றவாளிகள் வசித்த போனிரிக் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய போலீசார், நவீத் அக்ரமின் தாயார் வெரீனாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், கேம்ப்சி புறநகர் பகுதியில் தந்தை–மகன் தற்காலிகமாக தங்கியிருந்த வாடகை இல்லத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் அரபி மொழியும் குர்ஆன் கல்வியும் வழங்கும் அல்-முராத் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவராக இருந்த நவீத் அக்ரம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இஸ்மாயிலுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு அக்ரம் அல்லது அவரது குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லை என இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை “தேசத்தின் இதயத்தை உலுக்கிய தீய யூத விரோத பயங்கரவாத செயல்” எனக் குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசி, ஆஸ்திரேலியா யூத சமூகத்துடன் உறுதியாக நிற்கிறது என்றும், யூத விரோதத்தை முற்றிலும் ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த தாக்குதலை யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் என இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கடுமையாக கண்டித்துள்ளார். அதேபோல், இஸ்ரேலிய தூதரகம் தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில், “ஒளியின் திருவிழாவாக கருதப்படும் ஹனுக்கா, நம்ப முடியாத அளவுக்கு இருளில் மூழ்கியுள்ளது” என பதிவு செய்துள்ளது. வெறும் ஒற்றுமை காட்டுவது மட்டும் போதாது என்றும், யூத உயிர்களை பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசு உறுதியான மற்றும் தீர்மானமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

90ஸ் கிட்ஸ்களின் ஐகான் ஜான் சீனா – WWE ரிங்குக்கு விடை

90ஸ் கிட்ஸ்களின் ஐகான் ஜான் சீனா – WWE ரிங்குக்கு விடை மல்யுத்த...

புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை அச்சுறுத்துகிறது

புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை...

மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை

மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை சிவகங்கை...