நடிகை மீதான பாலியல் வழக்கில் நீதியின்மை தொடர்கிறது – மஞ்சு வாரியர் வேதனை
நடிகை மீது நடைபெற்ற பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கில், நீதியான தீர்வு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என நடிகை மஞ்சு வாரியர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் திலீப் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து, மஞ்சு வாரியர் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், நீதித்துறையின் மீது தனக்கு ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் இருப்பதாக கூறியுள்ள அவர், இருப்பினும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நியாயம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
குற்றத்தை நேரடியாகச் செய்தவர்கள் சிலர் தண்டிக்கப்பட்டிருந்தாலும், இந்த கொடூரச் செயலை திட்டமிட்டு, பின்னணியில் செயல்பட்டவர்கள் எந்த விதமான தண்டனையும் இன்றி சுதந்திரமாக நடமாடி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குற்றச் சம்பவத்தின் பின்னால் இருந்த அனைவருக்கும் கடும் தண்டனை வழங்கப்பட்டாலே உண்மையான நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெண்கள் தங்கள் பணியிடங்களில், பொது இடங்களில் மற்றும் அன்றாட வாழ்க்கையிலும் அச்சமின்றி, தன்னம்பிக்கையுடன் வாழும் சூழலை உருவாக்குவது அவசியம் என்றும், அதற்காக சமூகமும், காவல்துறையும், சட்ட அமைப்புகளும் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் மஞ்சு வாரியர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.