கழிவு இரும்புப் பொருட்களை கலைச் சிற்பங்களாக மாற்றும் இளைஞர்!
உத்தரபிரதேச மாநிலத்தில் பயன்பாடின்றி கிடக்கும் பழைய பொருட்களை மீள்பயன்படுத்தி, அவற்றை கலைப் படைப்புகளாக உருவாக்கி வருமானம் ஈட்டி வரும் இளைஞர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சஹ்ரன்பூரைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், நட்–போல்ட், பழுதடைந்த வாகன உதிரிப்பாகங்கள், பழைய தையல் இயந்திரக் கூறுகள் மற்றும் பயன்பாடு இழந்த இயந்திரங்களின் இரும்புப் பகுதிகள் போன்றவற்றை கொண்டு தனித்துவமான உலோகச் சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.
முற்றிலும் கைவேலை மூலம் தயாரிக்கப்படும் இவரது கலைப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் வடிவமைக்கப்படுகின்றன. கொரில்லா, குதிரை, சிங்கம், டைனோசர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்டவை என்பதால் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.
அருண் குமாரின் சிருஷ்டிப்பான கலைப் படைப்புகள் இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ஆயிரம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாய் வரை மதிப்பிடப்படும் இவரது உலோகச் சிற்பங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.