ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி
இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாத் சென்ற அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து கால்பந்து விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மூன்று நாள் இந்திய பயணத்தில் உள்ள மெஸ்ஸி, நேற்று தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தை வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சந்தித்து கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான அணிக்கு எதிராக மெஸ்ஸி களமிறங்கி கால்பந்து விளையாடினார்.
போட்டியின் போது, மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை நோக்கி பந்தை உதைத்து அவர்களை உற்சாகப்படுத்திய மெஸ்ஸி, ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சியடைந்தார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சிங்கரேணி RR அணிக்கு மெஸ்ஸி கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.
பின்னர் உரையாற்றிய மெஸ்ஸி, ஹைதராபாத் ரசிகர்கள் அளித்த அன்பும் ஆதரவும் தனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகக் கூறி மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.