மரியா கொரினாவுக்கு நோபல் அமைதி பரிசு — நார்வே தூதரகத்தை மூடியது வெனிசுலா
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்டதையடுத்து, நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது.
வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காக நீண்டகாலமாக போராடி வரும் மரியா கொரினா, அந்நாட்டு மக்களிடையே “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்படுகிறார். அரசியல் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக பலமுறை கைது மிரட்டல்களையும் தடை உத்தரவுகளையும் எதிர்கொண்டவர் ஆவார்.
நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நோபல் கமிட்டி இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினாவுக்கு வழங்குவதாக கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வெனிசுலா அரசு, அந்த முடிவு “அந்நாட்டின் உள்நாட்டுக் கொள்கைகளில் தலையீடு செய்வதற்கான முயற்சி” என குற்றம்சாட்டியது.
இதனைத் தொடர்ந்து, நார்வேயுடன் உள்ள தன்னுடைய தூதரக உறவை நிறுத்தி, ஓஸ்லோவில் அமைந்துள்ள வெனிசுலா தூதரகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழுவால் வழங்கப்படுவது என்றும், இது நார்வே அரசின் வெளிநாட்டு கொள்கையுடன் தொடர்புடையது அல்ல என்றும் நோபல் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் வெனிசுலா அரசு அந்த விளக்கத்தை நிராகரித்து, இது “அரசியல் நோக்கமுடைய விருது” என கடுமையாக விமர்சித்துள்ளது.