பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ்
பெண்கள் சமையலறைக்குள் மட்டுமே இருப்பார்கள் என்ற பழைய மனப்பான்மை முற்றிலும் மாறி, இன்றைய பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக இணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியின் இல்லத் திருமண நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தனது துணைவியுடன் கலந்து கொண்ட ராமதாஸ், திருமணத்தை முன்னிட்டு சடங்குகளை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய அவர், ஏ.கே.மூர்த்தி சமூக வளர்ச்சிக்கும், கட்சி முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியவர் எனப் பாராட்டினார்.
மேலும், பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற காலம் கடந்துவிட்டதாகக் குறிப்பிட்ட ராமதாஸ், இன்றைய பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனைகள் படைத்து வருகிறார்கள் என்றும், மணமக்கள் இருவரும் சமுதாய நலனுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.