சேலம் : எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களுக்கு பயிற்சி – தேர்வில் உற்சாக பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, அதில் பயிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத 69,714 நபர்களுக்கு, இந்தத் திட்டத்தின் மூலம் அடிப்படை வாசிப்பு, எழுத்து மற்றும் எண்ணியல் அறிவு ஆகியவை தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன் கற்பிக்கப்பட்டது.
பயிற்சி காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அவர்களுக்கான மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. இதில் சேலம் மாநகரப் பகுதியில் மட்டும் 72 தேர்வு மையங்களில் சுமார் 1,694 பேர் தேர்வெழுதினர்.
இந்தத் தேர்வை வட்டார கல்வி அதிகாரிகள், வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் நேரில் பார்வையிட்டு கண்காணித்தனர். தேர்வு முடிவடைந்த பிறகு பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.