புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதி மறுக்கும் படகு இல்லம் நிர்வாகம்
நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளைப் புகைப்படம் எடுக்கும் பணிக்காக டெண்டர் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், நீண்ட காலமாக அங்கு பணியாற்றி வந்த புகைப்பட கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
உதகை படகு இல்லத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்விடத்தில் பல ஆண்டுகளாக புகைப்பட கலைஞர்கள் சுற்றுலாப் பயணிகளைப் படம் பிடித்து, அதற்கான கட்டணத்தைப் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
இதற்காக அவர்கள் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசுக்கு ரூ.4,593 கட்டணமாகச் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் படகு இல்ல வளாகத்தில் புகைப்படம் எடுக்கும் உரிமைக்காக அரசு டெண்டர் அறிவித்தது. அந்த டெண்டரை ஏற்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, பல வருடங்களாக அங்கு பணியாற்றிய புகைப்பட கலைஞர்களை படகு இல்ல நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், படகு இல்லத்தை நம்பி வாழ்ந்துவந்த புகைப்பட கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, புகைப்படம் எடுக்கும் பணிக்கான டெண்டர் முறையை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.