உள்ளாட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கேரளாவில் பதற்றமும் வன்முறையும்!
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவின் பல பகுதிகளில் கலவர சூழல் உருவானது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்தித்தது.
இந்த முடிவுகள் வெளியானதும், குறிப்பாக வட கேரளாவின் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. கண்ணூர் மாவட்டத்தில், சிபிஎம் ஆதரவாளர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை ஏந்தி தெருக்களில் நடமாடும் காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின.
மேலும், UDF கூட்டணியின் வெற்றியை கொண்டாடி சென்ற ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், அதன் பின்னர் தப்பிச் சென்ற சிபிஎம் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தையும், அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகியின் இல்லத்தையும் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், கோழிக்கோடு மாவட்டம் எரமலா பகுதியில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் நிலவிய பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இதற்கு மேலாக, தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவங்களில் சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலவரத்தைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல காவல் நிலையங்களில் வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சிபிஎம் ஆதரவாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.