திருவண்ணாமலை கோயில் மலையில் மர்ம தீவைத்தல் – பரபரப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறமாக அமைந்துள்ள மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதோடு, கிரிவலமும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த 3ம் தேதி நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு செய்தனர்.
இந்நிலையில், மலைப்பகுதியின் நடுவில் சில மர்ம நபர்கள் தீயை ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, கோயிலின் பின்னால் உள்ள மலைப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்தச் சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மலையில் தீ வைத்த குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனப் பொதுமக்களும், பக்தர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.