100 நாள் வேலை திட்டத்திற்கு புதிய பெயர் – மத்திய அரசு முடிவு
பொதுமக்கள் மத்தியில் “100 நாள் வேலை” எனப் பரவலாக அறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 15 கோடி கிராமப்புற மக்கள் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் இந்தத் திட்டம் “தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் 2009 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பெயர் இணைக்கப்பட்டு “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்” என மறுபெயரிடப்பட்டது. தற்போது, இத்திட்டத்தை “பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கார் யோஜனா” என்ற புதிய பெயரில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பெயர் மாற்றத்திற்கான சட்ட மசோதா நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேசமயம், புதிய மசோதாவின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கையை 100இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, கூடுதலாக 1.50 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.