இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆகும் – கணிப்பை உயர்த்திய ஐஎம்எப்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்நிதியாண்டில் 6.6% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், முந்தைய கணிப்பிலிருந்து 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐஎம்எப் வெளியிட்டுள்ள புதிய உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.4% வளர்ச்சி காணும் என ஜூலை மாதத்தில் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய பொருளாதார தரவுகள் அந்த கணிப்பை மாற்றியமைத்துள்ளன.
முதல் காலாண்டில் நிறுவனங்களின் லாபம் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத வகையில், அந்தக் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.8% எனப் பதிவானது. மேலும் உள்நாட்டு தேவைகள் அதிகரித்ததும், அரசின் மூலதனச் செலவினம் உயர்ந்ததும் இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. இதன் அடிப்படையில், 2025-26 நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.6% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்திருப்பதால், 2026-27 நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 6.2% ஆக சிறிது குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் அந்த ஆண்டுக்கான கணிப்பு 6.4% ஆக இருந்தது.
உலகளாவிய அளவில், 2025-26-ல் சராசரி ஜிடிபி வளர்ச்சி 3.2% ஆகவும், 2026-27-ல் 3.1% ஆகவும் இருக்கும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. 2024-25-ல் இது 3.3% ஆக இருந்தது. வளர்ந்த நாடுகளின் சராசரி வளர்ச்சி விகிதம் 1.5% என கணிக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் ஜிடிபி 2% வளர்ச்சியைப் பதிவு செய்யும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், உலக வங்கியும் இந்தியாவின் ஜிடிபி 6.3% ஆக இருக்கும் என கணித்தது. பின்னர், அதை 6.5% ஆக உயர்த்தியது. ஐஎம்எஃப் கணிப்பின்படி, இந்தியா தற்போது உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாகும்.
மேலும், விரைவில் இந்தியா ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகவும், அதன் பின்னர் ஜெர்மனியையும் முந்தி மூன்றாவது இடத்துக்குச் செல்வதாகவும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.