நூஹ் முதல் அமிர்தசரஸ் வரை NIA அதிரடி நடவடிக்கை – ISI தொடர்புடைய ஹவாலா, போதைப் பொருள் வலையமைப்பு முறியடிப்பு
இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் ISI ஆதரவுள்ள போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஹவாலா பணப்பரிவர்த்தனை வலையமைப்பை குறிவைத்து, தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் ஹரியானா சிறப்பு புலனாய்வுக் குழு இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு அமைப்புகளின் இரண்டாவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, போதை வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு குற்றவாளிகளை இந்திய சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய காலம் வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதற்காக NCB, NIA, CBI மற்றும் மாநில காவல் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போதைப் பொருள் குற்றங்களுடன் சேர்த்து பயங்கரவாதம் மற்றும் கூட்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கும் எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் செயல்பட்டு வந்த ISI ஆதரவு பெற்ற ஹவாலா வலையமைப்பை NIA மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வந்தன.
அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஹரியானாவின் நூஹ் மாவட்டத்திற்கு அருகிலுள்ள தாவோரு பகுதியில், சோஹ்னா புறவழிச்சாலையில் இருந்து ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தியாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், போதைப் பொருள் கடத்தலுக்காகவும் ISI அமைப்பிடம் இருந்து ஹவாலா வழியாக நிதி பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரிஸ்வானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நூஹ் நகரைச் சேர்ந்த முஷாரஃப் என்ற பர்வேஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்த இவர்கள் இருவரும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த இனிப்பு வியாபாரி அஜய் அரோராவும் கைது செய்யப்பட்டார்.
ஹவாலா வழி பண பரிமாற்றங்களை அஜய் அரோரா ஒருங்கிணைத்ததாகவும், அவரது குடும்பம் நடத்தி வந்த இனிப்புக் கடை இந்த சட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கான முகமாக பயன்படுத்தப்பட்டதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவரது வீட்டிலிருந்த லாக்கரில் இருந்து 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரிஸ்வானுக்கு மூன்று முதல் நான்கு தவணைகளில் மொத்தம் 34 லட்சம் ரூபாய் வழங்கியதாக அஜய் அரோரா ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஹவாலா பண விநியோகச் சங்கிலி முழுமையாக கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆழமான விசாரணையில், அமிர்தசரஸைச் சேர்ந்த சந்தீப் சிங் (ககன்), அமன்தீப் சிங் மற்றும் ஜஸ்கரன் சிங் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். ISI ஏஜெண்ட்கள் மூலம் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட ஹவாலா பணம், பஞ்சாப் முழுவதும் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானாவின் நூஹ் மாவட்டம், முன்பே சட்டவிரோத செயல்பாடுகளுக்கான மையமாகக் கருதப்பட்டு வந்தது. 2023ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற இந்து ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, காவல் துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். அச்சம்பவங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு மற்றும் தனியார் சொத்துகள் சேதமடைந்தன.
மேலும், நூஹ் பகுதியில் செயல்படும் சில அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வருவதாகவும், ஹலால் சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம் வருமானம் ஈட்டப்படுவதாகவும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இதன் மூலம் ISI தொடர்புடைய நபர்கள் அந்தப் பகுதியில் செயல்படக்கூடும் என்ற சந்தேகம் தற்போது உறுதியாகி வருவதாக கூறப்படுகிறது.
நக்சல் அச்சமில்லாத இந்தியா என்ற இலக்கைப் போலவே, போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.