துரந்தர் திரைப்படத்திற்கு மேற்காசிய நாடுகளில் தடை – 6 நாடுகள் வெளியீட்டை மறுப்பு
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் திரைப்படத்திற்கு மேற்காசியாவில் உள்ள ஆறு நாடுகள் வெளியீட்டுத் தடையை விதித்துள்ளன. இந்த முடிவு, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில், உரி படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படம், பாகிஸ்தானின் லியாரி பகுதியில் இந்திய உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துரந்தர் திரைப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் மற்றும் அரசியல் ரீதியான விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, மேற்காசிய நாடுகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய ஆறு நாடுகள் தங்கள் நாடுகளில் துரந்தர் திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளன.
மேற்காசிய நாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கு பெரிய சந்தை உள்ள நிலையில், இந்த தடை படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பொருளாதார ரீதியில் பெரும் இழப்பாக அமையக்கூடும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், உண்மை சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படையாகக் காட்டியதாலேயே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தடை உத்தரவு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் தீவிரமாகி வரும் நிலையில், துரந்தர் திரைப்படம் இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.