காசாவில் இருந்து பிணைக் கைதிகள் விடுவிப்பு – 738 நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த இஸ்ரேல் தம்பதி
காசாவில் ஹமாஸ் குழுவின் பிடியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதன் மூலம் 738 நாட்களுக்குப் பிறகு ஒரு இஸ்ரேல் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடும் மோதல் நடந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயற்சியால் சமீபத்தில் இருதரப்பினரிடையே அமைதி ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகி, கடந்த 10ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமல்பெற்றது.
அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் குழுவினர் பிடித்திருந்த 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 154 பாலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவராக இருந்தவர் அவிநாட்டன் ஓர், ஹமாஸ் அமைப்பின் பிடியில் சுமார் 738 நாட்கள் பிணைக் கைதியாக இருந்தார். விடுவிக்கப்பட்ட அவர், வீடு திரும்பியபோது, அவரது மனைவி நோவா அர்காமனி கண்ணீருடன் ஓடி வந்து கட்டியணைத்து, முத்தமிட்டு வரவேற்றார். இருவரும் சந்தோஷக் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்ட காட்சி அனைவரையும் உருக்கியது.
நோவா அர்காமனியும் முன்பு ஹமாஸ் குழுவினரால் கடத்தப்பட்டு 245 நாட்கள் பிணைக் கைதியாக இருந்தார். பின்னர், இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இருவரும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவிநாட்டன் ஓர் தனது மனைவியின் கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதனைப்பற்றி நோவா அர்காமனி கூறியதாவது:
“2023 அக்டோபர் 7ம் தேதி நடந்த இசை விழாவின்போது ஹமாஸ் தாக்குதல் நடந்தது. அந்த இரவு என் வாழ்க்கையின் மிகக் கொடிய அனுபவம். கணவர் உயிரோடா இருக்கிறார் எனத் தெரியாது. இப்போது அவரை மீண்டும் பார்த்தது என் வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி.”