திரையரங்குகளை அதிர வைக்கும் ‘துரந்தர்’ – நிஜ சம்பவங்களை நெஞ்சை உலுக்கும் வகையில் சொல்லும் படம்!
ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ‘துரந்தர்’ திரைப்படம், வசூல் பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில், காந்தகார் விமான கடத்தல் மற்றும் 2001-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் போன்ற சம்பவங்களின் பின்னணியில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத வலையமைப்பை தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதும் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தின் முழுப் பின்னணியை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
‘உரி’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ஆதித்ய தர், தனது அடுத்த படமாக ‘துரந்தர்’-ஐ உருவாக்கினார். ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், வெளியான ஒரே வாரத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் தொடங்கிய நாள் முதலே, இது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. வெளியீட்டுக்கு முன் வெளியான ட்ரெய்லரும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக, முதல் நாள் முதல் காட்சி காண ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
1999-ஆம் ஆண்டு காந்தகார் விமானக் கடத்தல் மற்றும் 2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் ஆகிய இரு முக்கிய சம்பவங்களுக்குப் பின்னால் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க இந்திய உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளே, ‘துரந்தர்’ படத்தின் மையக் கதை.
பஞ்சாபை சேர்ந்த ஒரு இளைஞனை தேர்வு செய்து, இந்திய உளவுத்துறை அவருக்கு சிறப்பு பயிற்சி அளித்து, பாகிஸ்தானுக்குள் அனுப்பும் தைரியமான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதை, சினிமா மொழியில் பரபரப்பாக படம் காட்டுகிறது. இந்திய உளவுத்துறை தலைமை அதிகாரி அஜய் சன்யால் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவனும், அந்த பஞ்சாப் இளைஞனாக ரன்வீர் சிங்கும் தங்களின் நடிப்பில் முழு அர்ப்பணிப்பை காட்டியுள்ளனர். சஞ்சய் தத்தும் வலுவான தோற்றத்துடன் தன் கதாபாத்திரத்திற்கு நீதி செய்துள்ளார்.
விறுவிறுப்பான திரைக்கதை, திடுக்கிட வைக்கும் திருப்பங்கள் ஆகியவை பார்வையாளர்களை முழு நேரமும் திரைக்கு கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளதால், ‘துரந்தர்’ நகரம் முதல் கிராமம் வரை வெற்றி நடை போடுகிறது. வேலை நாட்களில் காலை மற்றும் மதிய காட்சிகளில் கூட்டம் சற்று குறைந்தாலும், மாலை மற்றும் இரவு காட்சிகள் நிரம்பி வழிகின்றன. ‘உரி’ திரைப்படத்தின் மொத்த வசூலை இந்த வாரத்திலேயே ‘துரந்தர்’ முறியடிக்கும் என சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.
இதற்கிடையில், இந்தியாவில் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்திற்கு வளைகுடா நாடுகளில் வெளியீட்டு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேகங்கள் போன்ற நாடுகளில் பாலிவுட் படங்களுக்கு பெரும் சந்தை உள்ள நிலையில், இந்தத் தடை ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், உண்மை சம்பவங்களை மறைக்காமல் நேரடியாக சொல்ல வேண்டும் என்ற உறுதியுடன் படம் உருவாக்கப்பட்டதால், எந்தவித இழப்பையும் ஏற்கத் தயாராகவே படக்குழு செயல்பட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.