மெஸ்ஸியை நேரில் காண இயலாத ஏமாற்றம் – மைதானத்தில் ரசிகர்கள் அட்டகாசம்
கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியை நேரில் பார்க்க முடியாத ஏமாற்றத்தில் ரசிகர்கள் மைதானத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பான நிலை உருவானது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட 70 அடி உயரமுள்ள அவரது பிரம்மாண்ட உருவச் சிலையை காணொளி வழியாக அவர் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் மெஸ்ஸி தோன்றுவார் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே அங்கு தங்கினார். அந்த நேரத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தனர்.
இதனால் மைதானத்தில் கூடியிருந்த பொதுமக்களுக்கு மெஸ்ஸியை தெளிவாகக் காண முடியாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், தங்களிடம் இருந்த தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசி எறிந்தனர்.
மேலும், அமர்விட நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்த தொடங்கியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
மெஸ்ஸியை காணும் ஆர்வத்தில் மைதானத்திற்கு வந்த ரசிகர்கள், எதிர்பாராத கலவரத்தைக் காண வேண்டிய நிலை ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.