சாவர்க்கரின் சமூக மறுமலர்ச்சி பணிகள் உரிய பாராட்டை பெறவில்லை
அந்தமான் – நிகோபார் தீவுகளில் சுதந்திர போராட்ட வீரர் வீர விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு நினைவாக அமைக்கப்பட்ட உருவச் சிலை சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
தெற்கு அந்தமான் மாவட்டத்தில் உள்ள பியோத்னாபாத் நகரப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலையை, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இணைந்து திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமித்ஷா, சாவர்க்கர் மேற்கொண்ட சமூக சீர்திருத்த முயற்சிகள் போதிய மதிப்பீடு பெறாமல் போய்விட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட சமூக அவலங்களுக்கு எதிராக அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் உரிய அங்கீகாரத்தை பெறவில்லை என்பதில் வருத்தம் தெரிவித்தார்.
இந்து சமுதாயத்தில் நிலவிய தவறான பழக்க வழக்கங்களை எதிர்த்து சாவர்க்கர் உறுதியுடன் போராடியவர் என்றும், சமூக மாற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.
மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கரங்களால் சாவர்க்கரின் சிலை திறக்கப்பட்டமை தமக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.