ட்ரம்ப் கொண்டு வந்த ‘கோல்ட் கார்டு’ விசா – என்ன சிறப்பு?
திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கச் செய்யும் நோக்கில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய ‘கோல்ட் கார்டு’ விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டம் எந்த வகையில் தனித்துவம் பெறுகிறது என்பதை இச்செய்தித் தொகுப்பு விளக்குகிறது.
அமெரிக்காவில் வேலை செய்வதும், அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதும் பல வெளிநாட்டினரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. ஒருமுறை அமெரிக்காவில் குடியேறிய பின்னர், கிரீன் கார்டு பெறுவதே அவர்களின் முக்கிய இலக்காக மாறுகிறது. காரணம், கிரீன் கார்டு கிடைத்தால், அமெரிக்க குடிமகனுக்குச் சமமான உரிமைகள் மற்றும் வசதிகளை ஒருவர் பெற முடியும்.
ஆனால், கிரீன் கார்டை பெறுவது மிகவும் சிக்கலானதும், நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் செயல்முறையுமாக உள்ளது. பல கட்ட அனுமதிகள், தகுதி விதிகள் என கடினமான நடைமுறைகள் இருப்பதால், வெளிநாட்டினர் பலர் இடையில் விரக்தியடைந்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்கிறார்கள்.
இந்தச் சூழலை மாற்றும் நோக்கில், திறமையான மனித வளத்தையும், பெரும் முதலீட்டாளர்களையும் அமெரிக்காவில் தக்க வைத்துக்கொள்ள ‘கோல்ட் கார்டு’ விசா திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்தார். தொடக்கத்தில் இந்த விசாவின் கட்டணம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது சுமார் 45 கோடி ரூபாயாகும்.
விலை மிக அதிகம் என்ற விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு கட்டணத்தில் திருத்தம் செய்தது. அதன் அடிப்படையில், தனிநபர்கள் இந்த விசாவைப் பெற சுமார் 9 கோடி ரூபாயும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக விண்ணப்பிக்கும்போது சுமார் 18 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
பெரிய நிறுவனங்கள் ‘கோல்ட் கார்டு’ விசாவை பெற்றுத் தங்களின் திறமையான ஊழியர்களுக்கு வழங்கலாம் என்றும், அந்த ஊழியர் குடியுரிமை பெற்ற பின், அதே விசாவை மற்றொரு பணியாளருக்குப் பயன்படுத்தலாம் என்றும் அமெரிக்க அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதனிடையே, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ட்ரம்ப் இந்த ‘கோல்ட் கார்டு’ விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர், இந்த விசா கிரீன் கார்டை ஒத்ததுதான் என்றாலும், அதைவிட அதிக சலுகைகள் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
“இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த திறமைமிக்க மாணவர்கள் ஹார்வர்ட், MIT, பென்சில்வேனியா போன்ற உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்கிறார்கள். படிப்பு முடிந்ததும் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்வது அமெரிக்காவுக்கே இழப்பாகும்” என ட்ரம்ப் விமர்சித்தார்.
ஆனால், புதிய கோல்ட் கார்டு விசா மூலம், அத்தகைய திறமையாளர்களை அமெரிக்காவிலேயே தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விசாவால் வசூலிக்கப்படும் தொகை நேரடியாக அமெரிக்க அரசுக் கருவூலத்தில் சேரும் என்றும், அதன் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் ட்ரம்ப் விளக்கம் அளித்தார்.
மேலும், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் பயின்ற நிபுணர்களை, பெரிய நிறுவனங்கள் எளிதாகப் பணியமர்த்திக் கொள்ள இந்த விசா பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார்.
தேச பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களாக இருப்பது உறுதியானாலோ, எந்த வகை விசாவாக இருந்தாலும் அது ரத்து செய்யப்படும் என்றும், கோல்ட் கார்டு விசாவுக்கும் இதே விதிகள் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், தனிநபர்களாக இருந்தாலும் சரி, நிறுவன ஊழியர்களாக இருந்தாலும் சரி, சிறந்த திறமையாளர்களை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக்கொள்ள இந்தத் திட்டம் உதவும் என்றார்.
மேலும், கோல்ட் கார்டு விசா பெற்றவர்கள், ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின், அவர்களின் நன்னடத்தை மற்றும் சட்டப்பூர்வ நடத்தை அடிப்படையில் எளிதாக அமெரிக்க குடியுரிமை பெற வாய்ப்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 270 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும் ‘பிளாட்டினம் கார்டு’ என்ற புதிய திட்டத்தையும் அமெரிக்கா பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.