தோல்வி உறுதி என்றாலும் நீதித்துறையின் மரியாதையை சவால் செய்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க நோட்டீஸ் முற்றிலும் தவறானது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பளித்த காரணத்திற்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்த தகுதி நீக்க அறிவிப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியும் கையொப்பமிட்டிருப்பது வியப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேர்மையாகவும் நியாயமாகவும் தீர்ப்பளித்தால் இப்படிப்பட்ட நிலை வரும் என்ற அச்சத்தை திமுக உருவாக்கி வருவதாகவும், வழக்கில் வெற்றி பெற முடியாது என்பது தெரிந்திருந்தும் நீதிபதியின் கண்ணியத்தையே திமுக கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.
மேலும், SIR நடைமுறையின் மூலம் சுமார் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்ற தகவலையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு முன் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 12.5 சதவீதம் கூடுதல் வாக்காளர்கள் இருப்பதாகக் கூறி தேர்தல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும் மக்கள் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆட்சியாளர்கள் வெளிப்படையாக ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும், அதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம் எனவும் கூறினார். மகளிர் உரிமைத் தொகைதான் முதலமைச்சரின் கடைசி அரசியல் ஆயுதம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.