இந்திய மண்ணில் காலடி வைத்த உலக கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியா வந்ததையடுத்து, அவரை காண விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் உற்சாகக் குரல்களுடன் வரவேற்பளித்தனர்.
“இந்தியா டூர் 2025” திட்டத்தின் ஒரு பகுதியாக அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் மெஸ்ஸி விமானம் மூலம் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை வந்தடைந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு, கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மூன்று நாட்கள் இந்தியாவில் தங்க உள்ள மெஸ்ஸி, இன்று உலகக் கோப்பையை ஏந்திய 70 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள தனது பிரம்மாண்ட சிலையை காணொலி வழியாக திறந்து வைக்கிறார். அதன் பின்னர் ஹைதராபாத்தில் நடைபெறும் சிறப்பு காட்சி கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளார். அந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மெஸ்ஸி, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பேஷன் ஷோவிலும் கலந்து கொள்ள உள்ளார். மூன்றாம் நாளில், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.