“அது யாருடைய தவறு?” — ரஞ்சி வர்ணனையில் நடந்த சுவாரஸ்ய ‘ரியல்’ தருணம்
ரஞ்சி டிராபி போட்டி ஒன்றின் நேரடி வர்ணனையில், முன்னாள் இந்திய வீரர்கள் சலைல் அங்கோலா மற்றும் சேத்தன் சர்மா இடையே நடந்த உரையாடல் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்சேனா, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். தற்போது மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். தனது நீண்ட உள்நாட்டு கிரிக்கெட் பயணத்தில் 150 முதல் தர ஆட்டங்களில் 7,000 ரன்களும் 484 விக்கெட்டுகளும் பெற்று சிறந்த சாதனையாளர் எனப் போற்றப்படுகிறார். கடந்த சீசனில் 6,000 ரன்களும் 400 விக்கெட்டுகளும் எடுத்த முதல் ரஞ்சி வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.
நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த மகாராஷ்டிரா–கேரளா எலைட் குழு பி ஆட்டத்தின் போது ஜலஜ் சக்சேனா பேட்டிங் செய்தார். அப்போது வர்ணனையில் இருந்த முன்னாள் வீரர்கள் சலைல் அங்கோலா மற்றும் சேத்தன் சர்மா இடையே நடந்த உரையாடல் இப்போது வைரலாகியுள்ளது.
அங்கோலா, “ஜலஜ் சக்சேனா இந்தியாவுக்காக விளையாடாமல் போனது எனக்கு ஆச்சரியம்,” என கூறினார். அதற்கு சேத்தன் சர்மா சிரித்தபடி, “சலைல், நீங்கள் ‘ஆச்சரியம்’ என்ற வார்த்தையே சொல்வது எனக்கே ஆச்சரியம். நாமிருவருமே ஒருகாலத்தில் அணித் தேர்வாளர்கள்,” என்று பதிலளித்தார்.
அங்கோலா உடனே “நீங்கள் தான் தேர்வுக் குழுத் தலைவர்” என்றபோது, சேத்தன் சர்மா, “அப்படியானால் ஜலஜ் சக்சேனா இந்தியாவுக்கு ஆடாததற்கான குற்றம் நம்மிருவருமே சுமக்க வேண்டியதாகிவிடும்,” என்று சிரித்தபடி உரையாடலை முடித்தார்.
இந்த உரையாடல் நகைச்சுவையாக இருந்தாலும், நெட்டிசன்கள் இதை சீரியஸாக எடுத்துள்ளனர். 2020–2024 காலத்தில் சேத்தன் சர்மா தேர்வுக்குழுத் தலைவராக இருந்தபோதும், சிறப்பாக விளையாடிய ஜலஜ் சக்சேனாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. பலரும், “ஒரு வீரர் நேர்மையுடன் உள்நாட்டு மட்டத்தில் உழைத்தும் தேசிய அணியில் இடம் பெறாதது, இந்திய அணித் தேர்வின் வலியும் உண்மையும் வெளிப்படுத்துகிறது,” என பதிவிட்டுள்ளனர்.