“என்னுடைய நடத்தைக்கு வருந்துகிறேன்” — மன்னிப்பு கேட்ட ‘குரோர்பதி’ வைரல் சிறுவன் இஷிட் பட்
‘கோன் பனேகா குரோர்பதி’ (KBC) நிகழ்ச்சியில் நடந்த தனது நடத்தைக்காக சமூக வலைதளங்களில் வைரலான சிறுவன் இஷிட் பட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா குரோர்பதி’ சீசன் 17 கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில், சிறுவர்களுக்கான சிறப்பு அத்தியாயம் ஒளிபரப்பப்பட்டது. அதில் குஜராத்தைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன் இஷிட் பட் கலந்து கொண்டார்.
அமிதாப் பச்சன் கேள்வி கேட்டவுடனே பதில்களை இடையறாது சொல்லி, “ஆப்ஷன் வேண்டாம், இதுதான் பதில், லாக் செய்யுங்கள்!” என்று தன்னம்பிக்கையுடன் பேசினார். இந்த நடத்தைப் பார்த்த சிலர், அந்த சிறுவன் அமிதாப் பச்சனை மதிக்கவில்லை என விமர்சித்தனர். பின்னர் ராமாயணம் குறித்த கேள்விக்கு தவறான பதிலை சொல்லி, போட்டியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, இஷிட் பட் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோலிங்குக்கு ஆளானார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு வெளியிட்டுள்ள இஷிட் பட், கூறியதாவது:
“குரோர்பதி நிகழ்ச்சியில் நடந்த என் நடத்தைக்காக நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பேச்சு பலருக்கு புண்பட்டதாக இருக்கலாம்; அதற்காக உண்மையிலேயே வருந்துகிறேன். அந்த நேரத்தில் பதட்டமடைந்தேன். திமிராக நடந்து கொள்ளும் நோக்கம் இல்லை. அமிதாப் பச்சன் சார் மற்றும் கேபிசி குழுவை மிகுந்த மதிப்புடன் பார்கிறேன். வார்த்தைகளும் நடத்தையும் நம் தன்மையை வெளிப்படுத்தும் என்பதை இப்போது புரிந்துகொண்டேன். இனிமேல் மேலும் பணிவாகவும் மரியாதையாகவும் இருப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பலர் அந்த சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். “அவர் இன்னும் சிறுவன். இவ்வளவு வயதில் இவ்வாறு கடுமையாக ட்ரோல் செய்வது தவறு; அது அவரது மனநிலையையும் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடும்,” என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டுள்ளனர்.