போரூரில் ரூ.2,000 கோடி முதலீடு – ஹிட்டாச்சியுடன் ஒப்பந்தம்; முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
சென்னை போரூரில் ரூ.2,000 கோடி முதலீட்டில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
ஜப்பான் நாட்டின் ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான இந்த நிறுவனம், கடந்த 2023-ஆம் ஆண்டு போரூரில் தனது உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை தொடங்கியது.
இப்போது, அந்த மையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி முதலீடு செய்து 3,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலர் நா. முருகானந்தம், தொழில் துறை செயலர் வி. அருண் ராய், மற்றும் ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரி ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், இந்தியா மேலாண் இயக்குநர் வேணு நுகரி ஆகியோர் பங்கேற்றனர்.