“தமிழ்நாடு என்ற பெயரை முதலில் வைத்தவர் பாரதியாரே; அண்ணாதுரை அல்ல” – சீமான்
ஈ.வெ. இராமசாமி, அண்ணாதுரை, சங்கரலிங்கனார் முதலானவர்கள் காலத்திற்கு முன்னரே “தமிழ்நாடு” என்ற பெயரைப் பயன்படுத்தியவர் சுப்பிரமணிய பாரதியார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் விஜில் அமைப்பு நடத்திய “பாரதி கண்ட வந்தே மாதரம்” என்ற சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாரதி பிறந்தநாள் மற்றும் வந்தே மாதரம் பாடல் உருவானது 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பலரும் திரளாக பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வையாபாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கருத்துரைத்தனர். தமது உரையில் சீமான், “பாரதி மதிக்கப்படாத இடத்தில் தமிழ் கூட மதிக்கப்படாது என்பது தான் உண்மை” என வலியுறுத்தினார்.