5 ஆண்டு தண்டனை: சிறையில் அடைக்கப்பட்டார் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தல் பிரச்சார நிதியில் சட்டவிரோத நிதி பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
2007-ம் ஆண்டு அதிபராக தேர்வான சர்கோசி, தேர்தல் பிரச்சாரத்திற்காக லிபியாவின் முன்னாள் அதிபர் மாமர் கத்தாபியிடமிருந்து சட்டவிரோத நிதி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்குப் பதிலாக, லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் ஆதரவளிக்க உறுதியளித்ததாகவும் வழக்கில் கூறப்பட்டது.
நீதிமன்றம் குற்றம் நிரூபித்ததைத் தொடர்ந்து தண்டனை அளித்தது. ஆனால், சர்கோசி தனது மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை; நான் அப்பாவி” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
சிறைக்கு செல்லும்போது சர்கோசி தனது மனைவியின் கைகளைப் பிடித்தவாறு வீட்டிலிருந்து புறப்பட்டார். அவரைச் சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தனிமைச் சிறையில் வைக்கப்படுவார் என்றும், மற்ற கைதிகள் அவரை அணுக முடியாது என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இரண்டு மாதங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.