ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியார் சிலைக்கு மாலை சூட்டி கௌரவம்!
மகாகவி பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் “பாரதி திருவிழா” என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவின் தொடக்கமாக, பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் முன்பிலிருந்து ஜதி பல்லக்கு ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், இந்த நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் கலந்து கொண்டார். பிறகு, ஆளுநரும் தமிழிசை சௌந்தரராஜனும் இணைந்து ஜதி பல்லக்கை தோளில் சுமந்து சில தூரம் நடந்து சென்றனர்.
பின்னர், திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்துக்கு வந்து, அங்கு உள்ள மகாகவி பாரதியாரின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அதன் பின் தமிழிசை சௌந்தரராஜனும் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார்.