2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் மனு பெறுதல் தொடக்கம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களைக் கவனத்தில் கொண்டு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தனது விருப்ப மனுக்களை சமர்ப்பிக்கலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
தகவல் அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களின் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களும் நெருங்கி வருகின்றன.
இதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளராக நிற்க விரும்பும் உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் கழகத்தில் டிசம்பர் 15, 2025 (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 23, 2025 (செவ்வாய்க்கிழமை) வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
முதல் நாளான டிசம்பர் 15 அன்று மட்டும் நண்பகல் 12 மணிக்கு பின்னர் படிவங்கள் வழங்கப்படும். படிவத்தில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிவர பூர்த்தி செய்து, குறிப்பிட்ட காலத்துக்குள் தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.