நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் — அமித்ஷா கடும் கண்டனம்
S.I.R. தொடர்பான பிரச்சாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தி வருவதாக எதிர்க்கட்சி கூட்டணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.
லோக்சபாவில் S.I.R. விவகாரத்தைச் சுற்றிய நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தாம் தோல்வி அடையும் மாநிலங்களில்தான் வாக்காளர் பட்டியலில் பிழைகள் உள்ளதாக குற்றம் சாட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
வாக்கு முறைகேட்டின் மூலம் தான் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டிய அவர், சுதந்திரத்திற்குப் பின் நடந்த முதல் பொதுத் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தும், இறுதியில் நேருதான் பிரதமராக அறிவிக்கப்பட்டார் எனவும் தெரிவித்தார்.
பின்னர் திருப்பரங்குன்றம் சம்பவத்தைப் பற்றிக் கூறிய அமித்ஷா, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக விடுக்கப்பட்ட தகுதி நீக்க நோட்டீசைப் பற்றி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அது வாக்கு வங்கிப் அரசியலுக்காக திமுக எடுத்த நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டினார். அதே காரணத்திற்காகவே கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் அனைவரும் அந்த நோட்டீசில் கையொப்பமிட்டிருப்பதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் தேர்தல் முறையை குறை கூறி வருவதாக அவர் விமர்சித்தார். அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், பின்னர் அவையிலிருந்து ஆதரவின்றி வெளியேறினர்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “விவாதத்திலிருந்து தப்பிக்க ராகுல் காந்தியைப்போல் ஓடப்போகும் நிலை எங்களுக்கில்லை” என்று கேலி செய்து பேசினார். மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கக் கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் தற்போதைய பிரதமரான மோடியும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவரே என்பதை நினைவூட்டிய அவர், காங்கிரஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பதிலாக வெற்றி பெறுவது பாஜகதான் என்ற பெருமிதத்தையும் வெளிப்படுத்தினார்.
பீகார் போலவே மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டிலும் இண்டி கூட்டணி தோல்வியடையும் என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.