பாகிஸ்தானில் புதிய மாகாணங்கள் உருவாக்கம்: உள்நாட்டு பதற்றம் அதிகரிக்கும் அபாயம் என நிபுணர்கள் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெரிய மாகாணங்களைப் பிரித்து புதிய சிறிய மாகாணங்களை உருவாக்கும் திட்டம் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் தீவிரம் பெற்றுள்ளது. நாட்டின் ஆட்சி அமைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மாகாண மறுசீரமைப்பு அவசியம் என கூட்டாட்சி தொடர்பு அமைச்சர் அப்துல் அலீம் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கெய்பர் பக்துன்க்வா ஆகிய நான்கு மாகாணங்கள் தற்போது செயல்படுகின்றன. மக்கள் தொகை உயர்வு, மொழி-பண்பாட்டு வேறுபாடுகள், வளங்களின் சமமற்ற பகிர்வு ஆகிய காரணங்களால் மாகாணங்களைப் பிரிக்க வேண்டுமென 1970களிலிருந்தே விவாதம் இருந்து வருகிறது. குறிப்பாக மிகப்பெரிய பஞ்சாப்பை தெற்கு பஞ்சாப் உள்ளிட்ட சிறு மாகாணங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது.
இந்த நிலையில், “ஒவ்வொரு மாகாணத்திலும் 3 புதிய மாகாணங்கள் உருவாக்கப்படும் வாய்ப்பு உள்ளது” என அமைச்சர் அப்துல் அலீம் கான் கூறியதால் இந்த விவாதம் புதிய தீவிரத்தைக் கண்டுள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையிலான கட்சியின் பல முக்கிய தலைவர்களும் இந்த யோசனையை ஆதரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் Pakistan People’s Party (PPP) கட்சி சிந்து மாகாணத்தைப் பிரிப்பதை கடுமையாக எதிர்த்து வருகிறது. இதுபோன்ற எதிர்ப்புகளே இதுவரை மாகாண மறுசீரமைப்பு திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் செய்ததாக கூறப்படுகிறது.
இதே நேரத்தில், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் புவிசார் அரசியல் நிபுணர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் உண்மையான பிரச்சனைகள் நிர்வாக பலவீனம், சட்டம்-ஒழுங்கு அமல்படுத்தல் குறைபாடு, உள்ளூர் ஆட்சி அமைப்புகளுக்கு அதிகாரக்குறைவு என்பவையென அவர்கள் கூறுகின்றனர். “இந்த அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்காமல் புதிய மாகாணங்கள் உருவாக்குவது மக்கள் மத்தியில் மேலும் மனக்கசப்பையும் அரசியல் கலகத்தையும் அதிகரிக்கும்,” எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அரசியல் நிர்வாக குறைபாடுகளை சரிசெய்யாமல் பிரிவு அரசியலை முன்னெடுத்தால், நன்மை காட்டிலும் தீமை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.