இந்தியாவில் மீண்டும் தாக்குதல் திட்டம்: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இரகசிய கூட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவுக்கு மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து பாகிஸ்தானில் உள்ள முக்கிய பயங்கரவாத அமைப்புகள் இரகசிய கூட்டம் நடத்தியதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
சமீபத்தில் ஜம்மு–காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, இந்தியாவில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த திட்டங்கள் தீட்டப்படுவதாக உளவுத்துறை முன்பே எச்சரித்திருந்தது. அந்தஅடிப்படையில், டெல்லி செங்கோட்டையைச் சுற்றிய பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவமும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புள்ளதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளை சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு பெரிய ஆலோசனை கூட்டம் நடத்தியதாக உளவுத்துறை புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவம் அழித்த முகாம்களில் மீண்டும் கட்டுமானப்பணிகள் தொடங்கியிருப்பதும் கவலைக்குரியதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.