“ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை!” — பிஹார் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிதிஷ் குமார் வாக்குறுதி
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மினாபூர் தொகுதியில் தொடங்கி, அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
முசாபர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
“இதுவரை பிஹாரில் 50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை இரட்டிப்பாக்கி, ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதே எங்களின் இலக்கு,”
என்று தெரிவித்துள்ளார்.
அவரது உரையில் மேலும்,
“நான் முதல்வராக பொறுப்பேற்கும் முன்பு பிஹாரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மாலைக்குப் பிறகு மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை. கல்வி, சாலை, மின்சாரம் ஆகிய துறைகள் மிகுந்த பின்தங்கியவையாக இருந்தன.
கடந்த 20 ஆண்டுகளில் எங்கள் அரசு மாநிலத்தை முழுமையாக மாற்றியுள்ளது. இன்று பிஹார் அமைதி, சகோதரத்துவம் மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது,”
என்று குறிப்பிட்டார்.
மேலும், மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டிடங்களுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் மத மோதல்கள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு சுமத்தி,
“பெண்களின் முன்னேற்றம் குறித்த எந்தச் செயலும் அவர் மேற்கொள்ளவில்லை. பதவியில் இருந்தபோது தனது மனைவியை முதல்வராக நியமித்தார், ஆனால் பிற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை,”
என விமர்சித்தார்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) உள்ள நிதிஷ் குமார், தாம் மீண்டும் லாலு யாதவ் கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்றும், பிஹாரின் முன்னேற்றப் பயணம் தொடரும் என்றும் உறுதியளித்தார்.