சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்த சீன நபர் உளவு முயற்சியிலா?
காஷ்மீர்–லடாக்கில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்ததால் கைது
சுற்றுலா விசாவுடன் இந்தியா வந்த சீன நபர் ஒருவர், அனுமதியின்றி காஷ்மீர் மற்றும் லடாக்கின் பாதுகாப்பு ரீதியாகத் தடை செய்யப்பட்ட பகுதிகள் சுற்றியதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டார்.
29 வயதான ஹூ காங்தாய் என்ற சீன நபர், வாரணாசி, ஆக்ரா, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் பிற புத்த மதத்தலங்களுக்கு மட்டுமே செல்லும் நிபந்தனையுடன் இந்தியா வந்திருந்தார். ஆனால் விசா நிபந்தனைகளை மீறி லே, ஜான்ஸ்கார் உள்ளிட்ட ராணுவத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பல நாட்கள் தங்கியிருப்பது உளவுத்துறையின் கவனத்தை ஈர்த்தது.
அவரது மொபைலில் CRPF படைகள், ARTICLE 370 நீக்கம் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான தேடல்கள் இருப்பதும் அதிகாரிகள் ரீதியாக சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு வந்த உடனே புதிய சிம் கார்டு வாங்கியிருப்பது கூடுதல் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரண்டு வார கண்காணிப்புக்குப் பிறகு, ஹூ காங்தாயை ஸ்ரீநகரிலுள்ள விடுதியில் சுற்றிவளைத்து உளவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது ஹும்ஹாமா காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை அதிகாரிகள், அவர் உண்மையில் சுற்றுலா நோக்கத்திற்காக வந்தாரா அல்லது உளவு தொடர்பான பணிகளில் ஈடுபட்டாரா என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் நுழைதல் பாதுகாப்பு ஆபத்தாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு பின் வெளிநாட்டு பயணிகளுக்கான விசா விதிகள் மேலும் கடுமையாக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.