அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கையின் பின்னணி – விளக்கமான செய்தி
இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு கூடுதல் வரி விதிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்ததற்குப் பின்னால் என்ன காரணம் உள்ளது? அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
உலக அரிசி ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கு வகிப்பது இந்தியா. உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 30%–ஐ கடந்துள்ளது. குறிப்பாக பாஸ்மதி அரிசி வகைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிகமான தேவை உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கா இந்தியாவில் இருந்து 2.34 லட்சம் டன் அரிசியை வாங்கியுள்ளது.
அதிபராக பொறுப்பேற்ற உடனே பல நாடுகளுடன் வர்த்தகக் களமிறங்கிய டிரம்ப், “பரஸ்பர வரி” என்ற கொள்கையின் கீழ் பல நாடுகளுக்கு கட்டணங்களை விதித்தார். இந்தியாவுக்கு முதலில் 25% வரி விதித்த அவர், பின்னர் இந்தியா ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி அதை மேலும் 25% உயர்த்தி மொத்தம் 50% வரி நிர்ணயித்தார்.
இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் ஜவுளி, தோல் மற்றும் கடல் உணவு போன்ற ஏற்றுமதித் துறைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு மாற்று சந்தைகளை உருவாக்கி வர்த்தகத்தை நிலைநாட்டியது. அமெரிக்காவைத் தவிர்த்து பிரிட்டன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் இந்தியா வந்த போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்தார். பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், எந்த நாட்டில் இருந்து அதிக நன்மை கிடைக்கிறதோ அங்கிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம் என்ற உரிமையையும் ரஷ்யா வலியுறுத்தியது.
இந்த சூழலின் நடுவில், அமெரிக்க விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்ட டிரம்ப், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வரும் தானிய இறக்குமதி மற்றும் கனடாவில் இருந்து வரும் மலிவு உரங்களால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
கனடாவுக்கு ஏற்கெனவே வரி விதித்திருந்தாலும், பொட்டாஷ், யூரியா போன்ற உரங்களுக்கு டிரம்ப் விலக்கு அளித்திருந்தார். ஆனால் இப்போது இத்தகைய உரங்களுக்கும் கடுமையான வரி விதிப்பதாகவும், இந்திய அரிசிக்கும் கூடுதல் கட்டணம் வரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
டிரம்பின் வர்த்தக கொள்கையால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற பிரச்சனைகள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக் கட்சி 220 இடங்களும், ஜனநாயகக் கட்சி 213 இடங்களும் பெற்றுள்ள நிலையில், வரவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி பல இடங்களில் பின்னடைவு அடையும் என ஊகிக்கப்படுகிறது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை முன்னிறுத்தி, இந்திய அரிசி மற்றும் கனடா உரங்களுக்குப் புதிய வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழு அடுத்த வாரம் இந்தியா வரவுள்ள சூழலில் இந்த எச்சரிக்கை கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.