பெர்த்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சி
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பெர்த்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் அக்டோபர் 19ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.
இந்திய அணி வீரர்கள் இரண்டு கட்டங்களாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். பெர்த் சென்றடைந்தவுடன் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் உடனடியாக பயிற்சியைத் தொடங்கி, சுமார் 30 நிமிடங்கள் வலையில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர். இதுதொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் இவ்விரு வீரர்களும் தற்போது ஒருநாள் வடிவில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். பயிற்சிக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீருடன், விராட் கோலி பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கலுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் இவர்கள் இருவரும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. வரவிருக்கும் உலகக் கோப்பை (2027) நோக்கி இவர்களின் உடற்தகுதி மற்றும் போட்டித் தயாரிப்பு நிலையை மதிப்பிடும் முக்கியமான தொடராக இது பார்க்கப்படுகிறது.