அமெரிக்கா இந்திய அரிசி இறக்குமதி செய்கிற விவகாரத்தை ஆய்வு செய்வேன் – டிரம்ப்
அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அரிசி வரத்து நடைபெறும் விவகாரம் குறித்து நான் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க விவசாயிகளுக்கு பில்லியன் டாலர் அளவில் நிதி உதவி வழங்குவதாக டிரம்ப் அறிவித்தார்.
அப்போது, மலிவு விலை இறக்குமதிகளால் உள்ளூர் சந்தையில் போட்டியிட முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் முறையிட்டனர்.
இந்த சூழலில், டிரம்ப் வெள்ளை மாளிகையில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் உடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்திய அரிசி ஏன் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது? அதற்கான சுங்கவரி சலுகை ஏதும் உள்ளதா? என்று டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கருவூல செயலாளர், இந்திய அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தக உடன்பாட்டில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், இந்தியாவில் இருந்து பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படக் கூடாது என்றும், இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் கவனிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.