யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை – இந்தியாவுக்கு பெருமை!
யுனெஸ்கோவின் உலக நினைவு சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற யுனெஸ்கோ அரசுகளுக்கிடையேயான குழுக் கூட்டத்தின் தொடக்க அமர்வில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
பகவத் கீதை மட்டுமல்லாமல், பாரத முனியின் நாட்டிய சாஸ்திரமும் சர்வதேச பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளதை பற்றி ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்தார். இந்த இரு படைப்புகளுக்கும் கிடைத்த இந்த அங்கீகாரம் “இந்திய கலாச்சாரத்தின் அடையாளத்தையும் பாரம்பரிய பெருமையையும் உலகளவில் உயர்த்தும்” என அவர் கூறினார்.
இந்தப் பதிவுகள் உலக மக்களிடையே பல்வேறு பாரம்பரியங்களின் மீது விழிப்புணர்வை உருவாக்கும் என்றும், கலாச்சார மரபுகளை பாதுகாப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுனெஸ்கோவின் நிறுவனர் உறுப்பினரான இந்தியா, கல்வி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியை மேம்படுத்த இணைந்து பணியாற்றும் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.