ஆண்களின் தலைமுடி வழுக்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு? – அயர்லாந்து நிறுவனத்தின் கண்டுபிடிப்பு பரபரப்பு
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஆண்கள் எதிர்நோக்கும் Androgenic Alopecia எனப்படும் தலைமுடி வழுக்கை பிரச்னைக்கு, அயர்லாந்தைச் சேர்ந்த Cosmo Pharmaceuticals நிறுவனம் ஒரு பெரிய முன்னேற்றத்தை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டும், மருந்துகள் எதிர்பார்த்த விளைவை வழங்காத சூழலில், இந்த நிறுவனம் புதுமையான ஒரு தீர்வை எடுத்துக் காட்டி உள்ளது.
பொதுவாக 20–30 வயதிலேயே ஆரம்பமாகும் ஆண்களின் வழுக்கை பிரச்னை, முதலில் தலையோரங்களில் தொடங்கி M அல்லது U வடிவில் தலைமுடி வரிசை குறையச்செய்கிறது. இறுதியில் தலையின் மேற்பகுதி முழுவதும் முடி கொட்டிவிடும். இதற்கான சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், Cosmo நிறுவனம் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில் புதிய முடிவுகள் வெளியாகியுள்ளன.
கழுகார நச்சுநீக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் Glascotteron என்ற மருந்தை இந்த நிறுவனம் தலைமுடி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தி பரிசோதனை செய்தது. சுமார் 1,500 ஆண்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மூன்று கட்டங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒரு குழுவிற்கு வழக்கமான சிகிச்சை அளிக்கப்படும் போது, மற்றொரு குழுவிற்கு Glascotteron மருந்து வழங்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில், இந்த மருந்தைப் பயன்படுத்திய குழுவினர் 168% முதல் 539% வரை தலைமுடி வளர்ச்சி பெற்றதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், எந்தவித பக்க விளைவுகளும் காணப்படவில்லை என்பதும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு தொடர்ந்து வெற்றியடையின், ஆண்களின் தலைமுடி வழுக்கைக்கான நிரந்தர தீர்வாக மாறும் திறன் கொண்டது என Cosmo நிறுவனத்தின் CEO ஜியோவானி டி நபோலி கூறியுள்ளார். வரும் ஆண்டில் அமெரிக்க FDA இந்த மருந்திற்கு அனுமதி வழங்கும் வாய்ப்பு உள்ளது. அப்படியானால், கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக தலைமுடி வழுக்கைக்கான புதிய மருந்து சந்தையில் அறிமுகமாகும்.
இந்த மருந்து பல ஆண்டுகளாக மனஅழுத்தத்துடன் வழுக்கை பிரச்னையை சமாளித்து வரும் ஆண்களுக்கு பெரிய நம்பிக்கையாக இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.