டெல்லி காற்று மாசுக்கு பின்னால் மறைந்திருக்கும் ‘செயற்கைக்கோள் தவிர்ப்பு’ தந்திரம் – விவசாயிகள் குறித்த அதிர்ச்சி தகவல்
டெல்லி–என்சிஆர் பிராந்தியத்தில் இவ்வாண்டு காற்று மாசு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பது குறித்து புதிய அதிர்ச்சிப் பின்னணி வெளியாகியுள்ளது. பயிர் கழிவு எரிப்பு குறைந்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ தரவுகள் இருந்தபோதும், மாசுபாட்டின் நிலை எதிர்பாராத வகையில் மோசமடைந்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ஒவ்வொரு அக்டோபர்–நவம்பர் மாதங்களிலும் நெல் அறுவடை முடிந்த உடனே வைக்கோலை எரிப்பது பழக்கமாக உள்ளது. கோதுமை விதைப்புக்கு முன் மிகக் குறைந்த நேரமே இருப்பதால், இம்முறை பயிர் எச்சங்களை எரிப்பதே விவசாயிகளுக்கு மிகவும் எளிதான வழி. இந்த நடைமுறையே குளிர்காலத்தில் டெல்லியின் காற்றை நச்சாக்கும் முக்கிய காரணம் என்பதை பல ஆய்வுகள் முன்பே காட்டியுள்ளன.
மத்திய அரசு, பயிர் எச்சங்களை எரிக்காமல் அகற்ற இயந்திரங்களை வாங்க விவசாயிகளுக்கு பெருமளவு மானியங்கள் வழங்கியதால், எரிப்பு சம்பவங்கள் குறையத் தொடங்கியதாக கருதப்பட்டது. ஆனால் இவ்வாண்டு AQI 450–ஐத் தாண்டி பல இடங்களில் ‘கடுமையான’ நிலையைத் தொட்டது. ஏரோசல் ஆய்வுகளின்படி, இது கடந்த 15 ஆண்டுகளில் மூன்றாவது மிக மோசமான குளிர்கால மாசு.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்த ஒரு அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது:
செயற்கைக்கோள்களின் கண்காணிப்பைத் தவிர்க்கவே, விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிக்கும் நேரத்தை மாற்றி வருகிறார்கள்!
நாசா விஞ்ஞானி ஹிரென் ஜெத்வா முதலில் இதை சந்தேகித்திருந்தார். காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை துருவ-சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் விவசாயப் பகுதிகளை ஸ்கேன் செய்கின்றன. இந்த நேரம் தவிர, பிற்பகல் வேளைகளில் செயற்கைக்கோள் கண்காணிப்பு குறைவாக இருக்கும்.
இஸ்ரோ, GEO-KOMPSAT 2A உள்ளிட்ட புவிசார் செயற்கைக்கோள்களின் படங்களை ஆய்வு செய்யும்போது, ஹரியானா–பஞ்சாப் பகுதிகளில் அதிகப்படியான புகை மூட்டம் மாலை நேரங்களில் மட்டும் தென்பட்டது. இதனால், விவசாயிகள் செயற்கைக்கோள் பார்வையை தவிர்த்து பிற்பகலில் எரிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் பல விஞ்ஞானிகள், கடந்த ஆண்டும் மாலை 5 மணிக்கே பெரிய அளவு புகை எழுந்ததை பதிவுசெய்துள்ளனர்.
ஹிரென் ஜெத்வா தனது டிசம்பர் 1ஆம் தேதியிலான எக்ஸ் பதிவில்,
“வைக்கோல் எரிப்பு 92% குறைந்தது என்ற தகவல் தவறானது; செயற்கைக்கோள்களை ஏமாற்றி மாலை நேரங்களில் எரிப்பது பொதுவான நடைமுறையாகிவிட்டது”
என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் கூட ஒப்புக்கொண்ட அதிர்ச்சியான உண்மை
பஞ்சாபின் நிலப் பதிவு அதிகாரி விபின், விவசாயிகளுக்கு “மாலை 4 மணிக்குப் பிறகு எரிக்கவும்” என்று அறிவுறுத்தப்பட்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதேபோல், அரசு விவசாய அதிகாரி அமர்ஜீத் சிங்கும் இதையே உறுதிப்படுத்தியுள்ளார்.
‘பயிர் எரிப்பு குறைந்தது’ என்ற மத்திய தரவுகள் ஏன் தவறாகும்?
IARI உள்ளிட்ட பல அரசுத் துறைகள் துருவ-சுற்றுப்பாதை செயற்கைக்கோள் தரவை மட்டுமே பயன்படுத்துவதால், மாலை நேர எரிப்புகள் பதிவாகாமல் போகின்றன. இதன் காரணமாகவே “எரிப்பு 90% குறைந்தது” என்ற மத்திய அறிக்கை வந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன.
வாகன, கட்டுமான தூசி, தொழில்துறை உமிழ்வு ஆகியவை ஆண்டு முழுவதும் மாசுபாட்டை உயர்த்தினாலும், குளிர்காலத்தில் டெல்லியின் காற்றை பெரிதும் சேதப்படுத்தும் முக்கிய காரணம் ஹரியானா–பஞ்சாப் மாநிலங்களில் எரிக்கப்படும் வைக்கோல் புகை என்பதையும் இஸ்ரோ ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.