பணி நீக்கப்பட்டதில் கோபம் – AI உதவியால் 96 ரகசிய கோப்புகள் அழித்த இரட்டை சகோதரர்கள் கைது!
பணியிலிருந்து நீக்கப்பட்ட கோபத்தில், நிறுவனம் சார்ந்த முக்கியமான ஆவணங்களை அழித்து பழிவாங்கிய இரட்டை சகோதரர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்தில் வர்ஜீனியா மாநிலத்தை சேர்ந்த முனிப் அக்தர் மற்றும் சோஹைப் அக்தர் எனும் சகோதரர்கள் பணியாற்றி வந்தனர். திடீரென இருவரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் மனஅழுத்தமும் கோபமும் அடைந்த அவர்கள், நிறுவனத்தை சேதப்படுத்த திட்டமிட்டு, அதற்காக செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். AI உதவியுடன் அமைப்பின் முக்கிய தரவுகளை அழிக்கும் திட்டத்தை வகுத்து செயல்படுத்தினர்.
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆவணங்கள், பல முக்கிய விசாரணை பதிவுகள் உள்ளிட்ட சுமார் 96 ரகசிய கோப்புகளை அழித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கூடுதலாக, 450 பேரின் வரி தொடர்பான தகவல்களையும் திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தங்கள் செயல்கள் கண்டுபிடிக்கப்படாதபடி இருக்க, “சிஸ்டம் லாக் பதிவுகளை எவ்வாறு நீக்குவது?” என்று AI-யிடம் ஆலோசனை கேட்டதுடன், தங்கள் லேப்டாப்களையும் நாசம் செய்துள்ளனர்.
நிறுவனத்தின் தரவுகள் காணாமல் போனதை உணர்ந்த அமெரிக்க அதிகாரிகள், டிஜிட்டல் தடயங்கள் மூலம் விசாரித்து, இரட்டை சகோதரர்களையும் கைது செய்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால்,
🔹 முனிப் அக்தருக்கு அதிகபட்சம் 45 ஆண்டுகள் சிறை,
🔹 சோஹைப் அக்தருக்கு அதிகபட்சம் 6 ஆண்டுகள் சிறை,
விதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.