மசூதி நிர்மாணத்திற்கு எதிராகக் கவிதை வாசித்த சிறுமிக்கு போலீசார் சம்மன்!
ரஷ்யாவில் மசூதி கட்டும் திட்டத்துக்கு எதிராகக் கவிதை சொல்லிய 12 வயது சிறுமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ம் நகரில் 2023 முதல் மசூதி கட்டுமானத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மரியா யுஷ்கோவா என்ற சிறுமி, அந்த திட்டத்தை கண்டிக்கும் வகையில் உணர்ச்சிகரமான ஒரு கவிதையை வாசித்தார்.
அவரது கவிதையில் “என் மக்களே எழுந்திருங்கள்; நம்மை அழிக்க முனைவோர் தாக்க வருகிறார்கள். நம் தாய்நாட்டை நாசம் செய்ய மசூதி உயரமாக எழுகிறது; அது நமக்காக ஒரு சாட்டையைத் தயார் செய்கிறது” போன்ற வரிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் சிறுமிக்கு சம்மன் அனுப்பி பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது மரியா, ரஷ்ய அரசியலமைப்புச் சட்டத்தின் 51வது பிரிவை குறிப்பிட்டு எந்த கேள்விக்கும் பதிலளிக்க மறுத்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த வீடியோ வெறுப்பை தூண்டும் விதமாக இருப்பதாகக் குற்றம் சாட்டி, சிறுமியின் பெற்றோருக்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பின்னர் விசாரணை முடிந்ததும் மரியா விடுவிக்கப்பட்டார்.