உக்ரைன் யுத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? : உண்மைக்கு இணங்கும் இந்தியா – சிறப்பு செய்தி!
ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புதினுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பில், உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை அணுகுமுறையில் இல்லை; அமைதிக்கான வழியையே இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
23-வது இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டெல்லி ஹைதராபாத் ஹவுஸ் வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வந்த புதின், உக்ரைனில் நடைபெறும் நிலைமைகள் குறித்து முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும், ஒரு அமைதியான தீர்வை உருவாக்கும் கலந்துரையாடல்களில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
உக்ரைன் பிரச்சினைக்கான தீர்வில் அதிக அக்கறை காட்டுகிறதற்காக பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி தெரிவித்த புதின், இந்தியா–ரஷ்யா உறவு பல ஆண்டுகளாக நம்பிக்கை, நட்பு, வரலாறு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது என்றார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்த இருநாட்டு உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி மிகுந்த பங்கு வகித்துள்ளார் என்றும், விண்வெளி ஆராய்ச்சி முதல் செயற்கை நுண்ணறிவு வரை பல மேம்பட்ட துறைகளில் இந்தியாவுடன் ரஷ்யா கூட்டாக செயல்படும் என்றும் புதின் உறுதியளித்தார்.
உலகில் நிலையான முன்னேற்றம் அமைதியிலேயே சாத்தியம் என்று கூறிய பிரதமர் மோடி, அமைதிக்கான வழிகளை உலக நாடுகள் சேர்ந்து தேட வேண்டும் என்றும், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உலகத்தை மீண்டும் அமைதிக்கு கொண்டு செல்வதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவிட் தொற்று முதல் இன்று வரை உலகம் பல சவால்களை கடந்திருக்கிறது; ஆனால் விரைவில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகும் என்றும் பிரதமர் கூறினார்.
உக்ரைன் மோதல் குறித்து உலகத் தலைவர்களுடன் பேசிய போதெல்லாம், இந்தியா எந்த நேரத்திலும் நடுநிலை என்று மட்டும் சொல்லவில்லை; உண்மையின் பக்கம், அமைதியின் பக்கம் என்ற தெளிவான நிலைப்பாட்டையே எடுத்துக்கொள்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அமைதியை நோக்கும் எந்த முயற்சிக்கும் இந்தியா எப்போதும் ஆதரவாக நிற்கும் என்றும் அவர் மறுபடியும் உறுதி தெரிவித்தார்.