கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான பேரிழப்பு
கோவாவின் வடக்கு மாவட்டம் அர்போரா பகுதியில் செயல்பட்டிருந்த ஒரு நைட் கிளப்பில் சமையலறை சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதால் அந்தப் பகுதிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வார இறுதி என்பதால் கிளப்பில் சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்த சூழலில், திடீரென சமையலறையில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பால் தீ வேகமாக பரவியது. சிலர் தீக்காயத்தால், மேலும் சிலர் புகை மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமுற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னர் இடத்துக்கு நேரில் சென்ற கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தீ பாதுகாப்பு விதிமுறைகள் அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டதே இவ்விபத்திற்கு முக்கிய காரணம் எனக் கூறினார். இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெறும் என்றும், பாதுகாப்பு ஒழுங்குகளை மீறி இப்படிப் பட்ட கிளப்பை இயக்க அனுமதித்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.