இலங்கையில் ₹100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் – 3 பேர் கைது
இலங்கையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்கள் அந்நாட்டு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்பிட்டி கடற்கரை அருகே ரோந்து பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கிடமாக நகர்ந்த ஒரு படகை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் மூன்று பெரிய மூட்டைகளில் அதிக அளவில் போதைப் பொருட்கள் மறைத்து கடத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, படகில் இருந்த மூவரையும் கைது செய்ததுடன், போதைப் பொருட்களும் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதைப்பொருட்கள் தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து கள்ளப்படகுகள் மூலம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக இலங்கை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், இவை சர்வதேச கடத்தல் குழுக்களுக்கு ஒப்படைக்கப்பட இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த தகவல்களைத் தொடர்ந்து தமிழகத்தின் பல கடலோர கிராமங்களில் மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன.