கூடங்குளம் குறித்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தது என்ன?
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு அணு உலைகளையும் முழு திறனுடன் இயக்கும் பணிகளில் ரஷ்யா முழுமையான ஆதரவு வழங்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இதனால் அந்தத் திட்ட முன்னேற்றம் அதிக வேகத்தில் நடைபெறும் என கருதப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக இருக்கும் கூடங்குளத்தில், தற்போது இரண்டு அணு உலைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள நான்கு உலைகளையும் செயல்பாட்டில் கொண்டு வருவதற்கான பொறுப்பை ரஷ்யா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் புதின் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, கூடங்குளம் திட்டத்தின் முதன்மை பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக புதின் குறிப்பிட்டார்.
ஆறு அணு உலைகளில் இரண்டு ஏற்கனவே மின் வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுமான நிலையில் உள்ள மீதமுள்ள நான்கு உலைகளையும் முழுமையான மின் உற்பத்திக்குக் கொண்டு வந்து, இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யா தொடர்ந்து பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கூடங்குளம் 3-ஆம் அணு உலைக்கான முதல் கட்ட அணு எரிபொருள் ரஷ்ய அரசின் அணுசக்தி நிறுவனம் ரோசாட்டம் மூலம் சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், புதின் வழங்கிய உறுதிமொழி இந்த செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்துகிறது.
மேலும், சிறு அளவிலான அணு உலைகள், மிதக்கும் அணுமின் நிலையங்கள், மருத்துவம் மற்றும் விவசாய துறைகளுக்கான அணு தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதற்கு முன் புதின் பேசியபோது, ரஷ்யா–பெலாரஸ் வழியாக இந்தியப் பெருங்கடல் நோக்கி சர்வதேச வடக்கு–தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை தொடங்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மேலும், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நடவடிக்கை தொடரும் என்றும், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகப் பரிமாற்றம் கடந்த ஆண்டில் ரூ.6.20 லட்சம் கோடி மதிப்பில் இருந்ததாகவும் புதின் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பும் திருப்திகரமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.