மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த தீபாவளி மிகச் சிறப்பு: பிரதமர் மோடி
மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் போன ஆண்டுகளைக் காட்டிலும் இந்த தீபாவளி மிகவும் சிறப்பானதாக இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்காக எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியதாவது:
“உற்சாகம் மற்றும் ஆனந்தம் நிறைந்த தீபாவளி பண்டிகைக்காக நாட்டு மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர், நீதியை நிலைநிறுத்தவும், அநீதியை எதிர்க்க தைரியமளிக்கவும் கற்றுத்தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு — அந்த நடவடிக்கையில் நமது நாடு நீதிக்காக போராடி, அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.”
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், நக்ஸலிசம் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் அமைதியாக, மகிழ்ச்சியுடன் விளக்குகள் ஏற்றி தீபாவளியை கொண்டாடினர். வன்முறையை விட்டு வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்து, அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் நிலைக்கு அந்த பகுதிகள் வந்துள்ளன. இது நமது தேசத்திற்கு ஒரு வரலாற்றுச் சாதனை.”
நாட்டின் வளர்ச்சி குறித்து மோடி மேலும் கூறியதாவது:
“இந்த வெற்றிகளின் மத்தியில், நாடு அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. நவராத்திரி முதல் நாளில் குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டு, அதனால் குடிமக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து வருகின்றனர். பல நெருக்கடிகளை சந்திக்கும் உலகில், இந்தியா ‘நிலைத்தன்மை’ மற்றும் ‘உணர்திறன்’ ஆகியவற்றின் அடையாளமாக மாறியுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் நாம் பயணிக்கிறோம்.”
அவர் கடிதத்தில் மேலும் வலியுறுத்தியதாவது:
“நமது கடமைகளை உணர்ந்து செயல்படுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்துவோம், ‘சுதேசி’ என்ற பெருமையுடன் வாழ்வோம். தூய்மையையும், ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்துவோம். உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து, யோகாவை ஏற்றுக்கொள்வோம்.
ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றும் போது அதன் ஒளி குறையாது; மாறாக அது அதிகரிக்கும். இதேபோல், தீபாவளி நமக்கு நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க கற்றுத்தருகிறது,” என்று பிரதமர் மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.